சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி (Pith Hat) வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் திரு.R.சுதாகர், இ.கா.ப., அவர்கள் இன்று (09.03.2024) காலை, மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை சந்திப்பில், கோடை வெயிலை சமாளிப்பதற்காக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் பாக்கெட் மற்றும் காகித கூழ் தொப்பி (Pith Hat) வழங்கி, இத்திட்டத்தை துவக்கி வைத்தார். ஆவின் மோர் வழங்கும் திட்டத்திற்கு ஒரு மோர் பாக்கெட் ரூ.6.33 வீதம் நாளொன்றுக்கு 4,970 மோர் பாக்கெட்டுகள் என ரூ.31,460.10 ம், 121 நாட்களுக்கு ரூ.38,38,132/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு மோர் காலை மாலை என இருவேளையும் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர்கள் திரு.D.மகேஷ் குமார், இ.கா.ப., (தெற்கு), திருமதி.N.தேவராணி, இ.கா.ப., (வடக்கு), போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு, போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.