பழம்பெரும் அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமான திரு. பழ. கருப்பையா “தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம்” என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்குகிறார். இது தொடர்பாக ஊடகவியலாளரோடு நடைபெற்ற சந்திப்பில் அவர் கூறியதாவது:
“இந்த புதிய கட்சியான தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம் இன்றைய அரசியல் சூழலில் காலத்தின் ஒரு கட்டாயமாக ஏன் உருவெடுத்திருக்கிறது என்பதைப் பற்றி ஓரிரு வரிகளில் நான் சொல்கிறேன். நேர்மை, எளிமை, செம்மை. அறம் சார்ந்த அரசியல். முக்கியக் கொள்கை என்பதே இக்கழகத்தின் முதல் கொள்கை.
சந்தைப்படுத்தப்பட்ட அரசியலை சமூகம் சார்ந்ததாக மாற்றுவது எமது முக்கிய கொள்கை. அரசியல் என்பது ஒரு வணிகமாக ஆகிவிட்ட நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சி இது. ஊர்வலம் போவதற்கு காசு, கூட்டம் கேட்க வருவதற்கு காசு என்று எல்லா நிலைகளிலும் பணம் இருந்தால் தான் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையில் அரசியலில் செயல்பட முடியும். அந்த நிலையில், ஆட்சியிலிருந்து பணத்தை விதைத்து ஆட்சியை நடத்துவது, ஆட்சியை முடித்து மீண்டும் அறுவடை செய்வது என இதுவொரு விஷம் தோய்ந்த சுழற்சி செயல்பாடாக இருக்கிறது. இத்தகைய அபத்தமான அரசியல் கடந்த 50 ஆண்டுகாலமாக இரண்டு தலையாயக் கட்சிகளால் தமிழ்நாட்டில் முன்னிலைப்பட்டிருக்கிறது. அத்தகைய அரசியலை மாற்றுவதற்கு நடந்த எந்த முயற்சியும் இதுவரை வெற்றிபெறவில்லை. எண்ணிக்கையில் சிலராக இணைந்து முதல் எட்டு வைத்திருக்கின்ற நாங்கள், இந்த முயற்சியில் வெற்றிபெற்றுவிடுவோமா என்பது முக்கியமில்லை. ஆனால், இதற்கான ஒரு முயற்சி தொடங்கப்பட வேண்டும்.
முதல் அடியே நீண்ட பயணத்திற்கு போதுமானது என்று சொல்வார்கள். ஒரு நீண்ட பயணத்திற்கும் முதலடி தான் ஆரம்பம். ஆகவே அந்த முதலடியை இப்போது நாங்கள் எடுத்து வைக்கின்றோம். மக்களிடம் கருத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் என்பது பொறுக்கித் தின்பதற்குரிய வழிமுறை என்று கருதப்படுகிறது. ஒரு கான்ட்ராக்ட் வாங்கலாம்; இல்லை என்றால் ஒரு கட்சியில் சேர்ந்தால் போலிஸ்காரரின் தோளில் கைபோடலாம்; நம் மீது வழக்கு தொடுக்க மாட்டார்கள் அல்லது வழக்கு என்பது பேருக்கு தொடுக்கப்பட்டு அது நீண்டகாலம் கடந்து கடைசியில் காணாமல் போய்விடும்.
ஆகவே தான் நான் சொல்கிறேன், ரொம்ப மோசமான கலாச்சாரம் இந்நாட்டிலே பரவி நிலைத்திருக்கிறது. பழையகால ஆரிய நீதியை, மனு நீதியை நாம் விமர்சனம் செய்கின்றோம். பார்ப்பனன் தவறு செய்தால், அவனுக்கு சிறிய தண்டனையும், மற்றவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனையும் விதிக்க வேண்டும் என்று ஜாதிக்கு ஒரு நீதி பேசிய மனுநீதிக்கு மாறாக இன்றைக்கு ஒரு திராவிட நீதி உருவாகியிருக்கிறது.
கட்சிக்காரன் தவறுசெய்தால் அதை அப்படியே அழுத்தி, மறைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடுவது என்பது தான் தற்காலத்து நீதி. அதற்கு ஒரு சான்று சொல்கிறேன். வேலுமணியின் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும். இன்னும் பல அதிமுக காரர்கள் மீதும் வழக்குத் தொடுக்க வேண்டும். செந்தில் பாலாஜினுடைய வழக்கு அழுத்தப்பட்டு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்பது தான். வேலுமணியின் மீது தொடுக்கின்ற வழக்கு ஊழலுக்கு எதிரான வழக்கில்லை; ஊழலுக்கு எதிரான வழக்கு என்று சொல்லப்படுகிறதே தவிர அவர் செய்கின்ற ஊழலுக்கு எதிராக எதிர்கட்சி செய்கிற ஊழலுக்கு எதிரான வழக்கு அது. தன் சொந்த கட்சிக்காரன் செய்தால், அவனுடைய தேவையை கருதி அது மறைக்கப்படுகிறது. அந்த வழக்கை தொள தொளக்க வைத்து ஒன்றுமில்லாமல் ஆகும்படி செய்யப்படுகிறது.
ஆகவே, இந்த நீதிமுறை நாட்டிலே நிலவாமல் போய்விடுகிற மிகப்பெரிய காரணம் அவர்களுக்கு ஒரு நீதி, நமக்கு ஒரு நீதி என்கின்ற அந்த மனப்பான்மை தான். இந்த முறைகளுக்கெல்லாம் மாறாக ஒரு பொதுக்கருத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். நான் தொடக்கத்திலேயே சொல்கிறேன்; ஒரு கட்சி என்பதை நாங்கள் சில ஆயிரம் நபர்கள் இணைந்து தொடங்கவிருக்கின்றோம். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று ராயப்பேட்டை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் எமது கழகத்தின் தொண்டர்களுடைய மாநாடு நடக்கவிருக்கிறது. அந்த மாநாடு தொண்டர்களுக்கு மட்டுமே உரிய மாநாடு. ஏற்கனவே 3, 4 நாட்களாக எமது கழகத்தில் சேர்கின்ற மற்றும் அந்த நிகழ்வின்போது சேர விருக்கின்றவர்களுக்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கின்றோம்.”