
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு மனுக்கள் சமர்ப்பிக்க வருகை தரும் பொதுமக்கள், அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த தனியார் உணவகத்தின் குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்ததால் மேற்படி காவலர் உணவகத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், ஆயுதப்படை துணை ஆணையாளர் அவர்கள் மேற்பார்வையில், காவல் ஆளிநர்களால் காவலர் நல உணவகம் (Police Welfare Food Canteen) நடத்த முடிவு செய்யப்பட்டு, காவலர் உணவகம் முழுவதும் குளிர் சாதன வசதி, R.O குடிநீர், வண்ண விளக்குகள், சுவர்களில் சித்திரங்கள், கப்போர்டு, திரைச்சீலைகள் மற்றும் டெலிவிஷன் என நவீன வசதிகளுடன் ரூ.14,50,861/- செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிடுவதற்காக வசதியாக காவலர் உணவகம் அருகில் புதிய ஷெட் அமைக்கப்பட்டு நாற்காலி மற்றும் டேபிள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., அவர்கள் இன்று (07.04.2025) காலை, வேப்பேரி, காவலர் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் புனரமைக்கப்பட்ட காவலர் நல உணவகத்தை (Police Welfare Food Canteen) திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காலை சிற்றுண்டி, மதிய உணவு, பழரசங்கள், டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை தரமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு, காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் ஆணையரகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு மற்றும் ஆயுதப்படை காவல் துணை ஆணையாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.