பொன்னியின் செல்வன் (முதல் பாகம்).
ஏறக்குறைய 60 -70 ஆண்டுகளாக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்து பின்பு புத்தகமாக பல பதிவுகளை பெற்ற அமரர் கல்கி எழுதிய ஒரு சரித்திரக் கதை.
இந்த கதையைப் படித்து ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை தன்னளவில் கற்பனை செய்து வைத்திருப்பார்கள்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த இசை அறிமுக நிகழ்வில் கூட ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தக் கதையை படமாக்க நினைத்ததையும் தாங்களும் அப்படி ஆசைப்பட்டதையும் சொல்லியிருந்தார்கள்.
கடைசியில அது இயக்குனர் மணி ரத்தினம் அவர்கள் மூலம் நிறைவேறி விட்டது.
கல்கி அவர்கள் ஐந்து பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் ஒரு முழுமை பெறாத நாவல்.
ஐந்தாம் பாகத்திலேயே வாசகர்கள் கேட்ட பல சந்தேகங்களுக்கு கல்கி அவர்கள் பதில் அளித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட முழுமை பெறாத ஒரு நாவலை திரைக்கதையாக எழுதி இயக்குவது என்பது மிகப்பெரிய சவால்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற நடிகர்களை தேர்வு செய்ததிலேயே முதல் வெற்றியைப் பெற்றிருந்தார் இயக்குனர் மணிரத்தினம்.
எந்த ஒரு அலங்கார வார்த்தைகளும் இன்றி தனித்துவமும் தவித்துவமும் பெற்ற வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்ட வசனங்களும் பாடல்களும் படத்தின் பழமைக்கு பெருமை சேர்க்கின்றன. இசையையும் குரலையும் இனிமையாக படைத்திருக்கிறார் ஏ. ஆர். ரகுமான்.
இந்தக் கதையை எழுதிய கல்கி அவர்கள் இவ்வாறு சொல்லி இருப்பார்; “வாசகர்களே என்னோடு பயணியுங்கள்; ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் உங்களை கைப் பிடித்து அழைத்துச் செல்கிறேன்” என்று. அதைப்போலவே நடிகர் கமல்ஹாசனின் முன்னுரையோடு கதை குறித்து முன்னோட்டத்தோடு தொடங்குகிறது படம்.
வானில் தோன்றிய தூமகேது, ஒரு அரச வம்சத்தின் உயிரை வாங்கும் என கல்கி சொன்னதைக் கச்சிதமாக சொல்லி இருக்கிறார்கள்.
காஞ்சியின் எல்லையில் போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன்; இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கும் அருள் மொழி வர்மன். நோய்வாய்ப்பட்ட நிலையில் சுந்தர சோழன்; வீரபாண்டியன் மரணத்திற்கு பழிவாங்கத் துடிக்கும் ஆபத்து உதவிகள்;
மதுராந்தகனைச் சோழ மன்னனாக்க நினைக்கும் சிற்றரசர்கள்; அதற்கு தலைமை வகிக்கும் பழுவேட்டரையர்கள்; இவர்களுக்கு துணை போகும் நந்தினி.
சோழநாடு வளம் பெற வண்டி கடமை ஆற்றும் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் , பூங்குழலி என்று இரு பிரிவாக நின்று போரிடும் கதாபாத்திரங்களைக் கொண்டதுதான் பொன்னியின் செல்வன் கதை.
குந்தவையின் கம்பீர அழகையும் நந்தினியின் வஞ்சக அழகையும் வந்திய த்தேவனின் வெகுளித்தனத்தையும் ஆதித்த கரிகாலனின் ஆவேசத்தையும் சுந்தரச் சோழனின் பொறுமையும் அருள்மொழி வர்மனின் தியாகத்தையும் நிறைவாக காட்டி இருக்கிறார்கள்.
இரண்டு மூன்று முறை தொடர்ந்து பார்க்கும் பொழுது இன்னும் படம் நமக்கு பிடித்துப் போகும்.
படத்தின் இறுதியில் நடக்கின்ற கடல் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
சோழ சாம்ராஜ்யத்தின் இரு பெரும் இளவரசர்களான ஆதித்ய கரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வனும் ஆபத்தில் இருப்பதாய் கதை முடிகிறது.
பொன்னியின் செல்வனை கடல் கொண்டு விட்டது போல் காட்டி, ஆதித்த கரிகாலனையும் காலம் அழைத்துக் கொள்ளப் போகிறது என்பதை நந்தியின் கையில் இருக்கின்ற வீரபாண்டியன் வாள் மூலம் உணர்த்தி ஒரு எதிர்பார்ப்போடு முதல் பாகத்தை வெற்றிகரமாக முடித்து இருக்கின்றார் மணிரத்தினம்.
இந்திய மண்ணிலிருந்து கடலில் பயணம் செய்து வெளிநாடுகளில் முதன்முதலாக வெற்றிக் கொடி நாட்டியவர்கள் தமிழர்களே என்ற உள்ளார்ந்த பெருமையுடன் படம் பார்த்து வெளியே வருகின்றோம் .
ஐப்பசி சதயத்தில் உதயமான அருள்மொழி- அனைவர் நெஞ்சங்களில் வாழ்வது அன்பின் வழி. கடல் கடந்து வெற்றிக் கொண்ட சோழனின் புலிக்கொடி- காலங்கள் கடந்து என்றும் பறக்கின்ற புழ்க்கொடி.
தமிழின் கணக்கும்; தமிழனின் கணக்கும்; எப்போதும் எங்கும் வெற்றியே பெறும்.