திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நம்பி நாராயணன் என்னும் ராக்கெட் விஞ்ஞானியின் வாழ்க்கையை கலப்படம் இல்லாமல் திரைப்படமாய் எடுத்திருக்கிறார் நம்ம மாதவன்.
சாக்லேட் பேபி தந்திருக்கின்ற அறுசுவை விருந்து இது. திறமை வாய்ந்த, தேசபக்தி மிக்க விஞ்ஞானி, ராக்கட் திரவ தொழில்நுட்பத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டக பயணம் இது. தனது தேசத்திஅ முன்னேறத்திற்காக தேகத்தை வருத்திக்கொண்டு அற்புத ஆன்மாவின் கதை இது.
வெளிநாடுகள் கொடுக்கவந்த சொகுசான வாழ்க்கையை உதறி, பிறந்த மண் பெருமை பெற வேண்டும் என்று உழைப்பைக் கொடுத்த ஒரு தேசபக்தனின் கதை இது.
அமைதியான குடும்ப நிகழ்வு, திருமணம், கோயில் செல்வது என்று அழகாக ஆரம்பித்த கதையில் கொஞ்ச நேரத்திலேயே நெஞ்சை உருக்கும் சம்பவங்கள். அதைத் தொடர்ந்து நம்பி நாராயணனை நடிகர் சூர்யா ஒரு தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பது, தொலைக்காட்சி ஊழியர்களே இந்த நிகழ்வை அலட்சியமாக படம் ஆக்குவதும், நிகழ்ச்சியின் முடிவில் அவர்களும் நம்மை போலவே நெகழ்ச்சி அடைவதுமாய் உணர்ச்சிக் கலவையான ஓர் உருப்படியான படம்.
ஒரு தனி மனிதனின் புகழ் பாடும் உச்ச காட்சிகள் வைக்காமல், உண்மை காட்சிகளை மட்டும் படமாக்கி இருப்பது மெச்சத் தகுந்தது.
நம்மை ஆண்ட ஒரு ஆங்கிலேய அதிகாரியின் வீட்டுக்குச் சென்று, அங்கு அவர்களால் தொடங்க இயலாத தொழில்நுட்பத்தையும் இயந்திரங்களையும் கேட்கின்றார் நம்பி.
இந்தியாவுக்கு செய்த எத்தனையோ இன்னல்களுக்குஇந்த தொழில்நுட்பத்தை தருவது தங்கள் கடமை என்று அந்த ஆங்கிலேயன் சொல்லிய போது, “இதன் விலை கோகினூர் வைரத்தை விட குறைவு தான்” என்று வரலாற்றை குத்திக் காட்டும் வார்த்தைகளை நம்பி உதிப்பது நயமாக இருக்கிறது.
திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள், நீண்ட பாடல், நகைச்சுவை காட்சிகள் இல்லை.இந்தியக் கணவர்கள் மனைவிகள் மீது மிகப் பிரியம் கொண்டவர்கள்; இந்தியாவில் ஜனத்தொகை அதிகம்; என்று ஆங்காங்கே நறுக்கென்று குறும்பு கொப்பளிக்கும் நகைச்சுவையான ரசிக்க வைக்கும் வசனங்கள்.
தன் சொந்த உழைப்பை எல்லாம் கொடுத்து ஒரு தொழில்நுட்பத்தை கற்று, அதன் விளைவாக சில இயந்திரங்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறுதி வெற்றி அடைகிறார் நம்பி நாராயணன். இந்த முயற்சியால்
இந்தியா இன்னும் வலிமை பெற்று விடும் என்ற பயத்தில் சதி வலை பின்னப்படுகிறது. தொழில்நுட்பங்களை எதிரி நாட்டிற்கு விற்றார் என்று முத்திரை குத்தப்பட்டு நம்பிக்கையின் முகம் உடைக்கப்படுகிறது.
அந்த வேதனைகளை எப்படி சமாளித்தார், இக்கட்டான சூழ்நிலையில் நண்பர்களும் அவரது குடும்பம் எப்படி அவருக்கு பக்கபலமாக இருந்தது என்பதை இதயம் கனக்கின்ற விதத்தில் இயல்பாய் படமாக்கி இருக்கிறார் மாதவன்.
ஒரு தேசபக்தரை தவறாக புரிந்து கொண்ட சமுதாயம், அவரை வீதியில் தள்ளி வேடிக்கை பார்த்தபோது ,தேசியக் கொடியும் தலை குனிந்து அழுவது போல் வருகின்ற காட்சியில் அனைவரும் உறைந்து போகிறார்கள் .
இஸ்ரோ ,நாசா பிரான்ஸ் ,ரஷ்யா என்று படமாக்கப்பட்ட இடங்களும், அப்துல் கலாம், விக்ரம் சாரா பாய், நீல் ஆம்ஸ்ட்ராங் என்று சாதனை மனிதர்கள் இயல்பாக வந்து போவதும் மிக அழகு.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப்பட்டு இந்தப் படம் எடுக்கப்பட்டதா? அல்லது நிலவில் ஒரு கேமரா வைத்து நடந்த நிகழ்வுகளை நமக்கு காட்டுகிறார்களா என்று எண்ணும் அளவுக்கு மிக எதார்த்தம். நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனாகவே மாறி இருக்கிறார்.
.கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் என்றுமே விஸ்வரூப வெற்றி கிடைக்கும்; அவரது பாணியிலேயே “எதையும் பெரிசா பண்ணனும்.”
நமது இந்தியாவின் வெற்றிக்குப் பின்னால் பல ,முகம் அறியப்படாத கதாநாயகர்களும் , பலரின் தியாக வாழ்வுயும் இருக்கிறது. இவர்களை பாராட்டா விட்டாலும் கூட , அவர்கள் ,பாதிப்பு அடையாத வண்ணம் பார்த்துக் கொள்வது நமது கடமை. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருப்பவர்களை உள் பகை கொண்டு வேறு நாடு எப்படி எல்லாம் சீரழிக்கிறது என்பதையும், அதற்கு நம்மவர்களும் துணை போவதை கண்டும் எல்லோர் நெஞ்சமும் கதறுகிறது .
இறுதியில் சதி வலை கிழித்து வெளியேறும் நம்பினாராயணன், மேதகு குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்று நடந்து வரும் பொழுது சத்தியத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது. தமிழ்த் திரைப்படத் துறை வரலாற்றில் வைரக்கல்லால் ஒளி வீசும் படத்தை மாதவன் தந்திருக்கிறார்.
விகாஸ் இயந்திரத்தைப் போலவே இந்த படம் என்றும் வெற்றி நடை போடும். வாழிய பாரத மணித்திரு நாடு.
Dr .R. சிவகுமார் IPS.