அரைகுறை அண்ணாமலை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? FAIRA தலைவர் ஆ.ஹென்றி சவால். 

ஜீ ஸ்கொயர் அப்ரூவல் சம்பந்தமாக உண்மைக்கு மாறான அவதூறு செய்தியை வெளியிட்டு வரும் அரைகுறை அண்ணாமலை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? FAIRA தலைவர் ஆ.ஹென்றி சவால்.

: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான ஹென்றி நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:&
கடந்த கால பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட அளவில் செயல்படுகிற டி.டி-சி.பி. என்ற நகர்ப்புற ஊரமைப்பு இயக்குனரகத்தில் வெறும் 5 ஏக்கர் வரை தான் அனுமதி பெறக்கூடிய சூழல் இருந்தது. நகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் இரண்டரை ஏக்கர் மட்டுமே அனுமதி பெற முடிந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எங்களின் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 5 ஏக்கர் என்பதை 10 ஏக்கர் வரைக்கும் இரண்டரை ஏக்கருக்கு பதில் 5 ஏக்கர் வரைக்கும் மாவட்ட அளவிலேயே அங்கீகாரம் பெறக் கூடிய வகையிலும் நடைமுறையை மாற்றி அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 15 ஆயிரம் சதுர அடி வரை உள்ள கட்டிடத்திற்கு மாவட்ட அளவில் உள்ள அலுவலகத்தின் அனுமதி பெறக்கூடிய வகையில் தான் கடந்த கால ஆட்சியில் சட்டங்கள் இருந்தன.

அதை மாற்றி அமைத்து தற்போது 40 ஆயிரம் சதுர அடி வரை அனுமதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்திலேயே கட்டிட திட்ட அனுமதி பெறுவதற்கான வழிவகைகளையும் இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது.

எந்த அரசும் செய்யாத…
சென்னையை போன்று கோவை, திருப்பூர், மதுரை, சேலம், ஓசூர், திருச்சி போன்ற பெரு நகரங்களிலும் பெரு நகர வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பதற்கு தமிழக அரசு வழி வகை செய்து கொடுத்திருக்கிறது.

மாவட்ட அளவில் நில வகை பயன்பாடு அதாவது நஞ்சை நிலத்தை புஞ்சை நிலமாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கும் போது அதை மாற்றுவதற்கான நோட்டிபிகேசன் அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும். அதை மாற்றி அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிலத்தின் பயன்பாடு மாற்றுவதை அந்தந்த மாவட்ட அளவிலேயே அரசிதழில் வெளியிடலாம் என்று தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.

இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை எந்த அரசும் செய்யாத மாபெரும் திட்டங்களை ரியல் எஸ்டேட் துறையை சீர்தூக்ககூடிய வகையில் ஒற்றை சாளர முறையில் அனுமதி என்ற திட்டத்தை தற்போதைய தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் கூட இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. அந்த ஆட்சியில் ரியல் எஸ்டேட் துறை எந்த அளவிற்கு நசுக்கப்பட்டது. அதிகார வரம்பை குறைத்து எந்த அளவுக்கு நசுக்க முடியுமோ, அந்த அளவுக்கு நசுக்கியது. அதையெல்லாம் இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் மாற்றி அமைத்தது.

ஒற்றை சாளர முறையில் இன்னும் 30 நாட்களில் வீட்டு மனைக்கான அனுமதியும், 60 நாளில் நிலப்பயன்பாடு மாற்றத்துக்கான திட்டமும் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்து விடும். இதன் மூலம் சாமானிய மக்கள் தங்கள் இல்ல கனவுகளை எளிதில் நிறைவேற்ற முடியும்.

கட்டிட திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போதும் சரி, வீட்டு மனை அபிவிருத்தியாளர்கள் மனைப்பிரிவுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போதும் சரி இனி அலைய வேண்டிய நிலை ஏற்படாது என்று நம்புகிறேன். ஒற்றை சாளர முறையில் கிட்டதட்ட 24 துறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே கட்டுமானம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெறுவதற்கு என்ன திட்டங்கள் எல்லாம் கொண்டு வரமுடியுமோ அவை அனைத்தையும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

நகர்ப்பகுதிகளில் வீட்டு மனைகள் ஏற்படுத்தினால் அதற்கான சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் தான் ஏற்படுத்திக் கொடுக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை அமைச்சர் ஏற்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அந்த வீட்டுமனை அபிவிருத்தியாளரே செய்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உள்ளாட்சி அமைப்புகள் அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு ஏற்படுத்தி கொடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

(பாக்ஸ்)
ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு 8 நாளில் அனுமதியா?
அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயார்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் சவால்
சமீபகாலமாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றி அரைகுறையாக கருத்து தெரிவித்து வருகிறார். எந்த வித புரிதலும் இல்லாமல் அரை வேக்காட்டுத் தனமாக அரை குறை அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் போது ஜி ஸ்கொயருக்கு சொந்தமாக கோவை மாவட்டத்தில் உள்ள இடத்துக்கு 8 நாட்களில் அனுமதி கொடுத்து விட்டனர் என்று கூறியுள்ளார். அவர் கூறியது உண்மைக்கு புறம்பானது. பா.ஜனதா கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் அந்த 122 ஏக்கர் நிலத்துக்கு உள்ளூர் திட்ட குழுமம் மூலம் நில பயன்பாடு மாற்றம் செய்வது குறித்து விண்ணப்பம் கொடுத்தனர்.

அந்த விண்ணப்பம் கொடுத்து கிட்டதட்ட 4 மாதங்கள் கழித்து கலெக்டர் அலுவலகத்தில் என்.ஓ.சி. கொடுக்கப்பட்டு உள்ளூர் திட்ட குழுமத்தில் அந்த கோப்பு பார்வேர்டு செய்து தலைமை அலுவலகத்துக்கு டெக்னிக்கல் கிளியரன்சுக்காக அனுப்பப்பட்டது. அங்கு கிட்டதட்ட 6 மாதம் கழித்து தான் அது கிளியராகிறது. இப்போது இறுதி பிளானிங் பர்மிட் கடந்த ஜனவரி மாதம் தான் கொடுக்கப்பட்டது. விண்ணப்பம் அளித்து 24 மாதங்கள் கழித்து தான் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜி ஸ்கொயர் என்ற நிறுவனம் 2013 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நிறுவனம். அது ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி. எந்த காலத்திலும் அவர்கள் நிலங்களை வாங்குவதில்லை. அபிவிருத்தி செய்வதில்லை

எனவே ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்ததில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. உதாரணத்துக்கு திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் அவர்களின் அருங்காட்சியகம் அமைக்கிற இடத்தில் கூட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய டி.டி.சி.பி. நிர்வாகம் கூறியது. இதைத் தொடர்ந்து எந்த வித குறைபாடும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அனுமதி கொடுங்கள் என்று தான் முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். அதன் காரணமாக எந்த குறைபாடும் இல்லாமல் திட்டம் தயாரித்து கொடுத்த பின்னர் திட்ட அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் பணிகள் தொடங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஆட்சியில் எதுவும் சட்டப்படி தான் நடக்கிறது.
இதையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் அண்ணாமலை அரை வேக்காட்டு தனமாக பேசி வருகிறார்.

8 நாட்களில் அனுமதி கிடைத்தது என்று அண்ணாமலை சொன்னது டி.டி-சி.பி.யிலோ சி.எம்.டி.யிலோ இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரியல் எஸ்டேட் ஓழுங்குமுறை ஆணையத்தில் வேண்டுமானால் நடந்திருக்கலாம். அந்த ஆணையம் ஆரம்பிக்கப்பட்டு 2017 முதல் 2021 வரை 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 66 திட்டங்களுக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2022ஆம் ஆண்டு 5 மாதங்களில் 4548 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பணி என்னவென்றால், திட்டத்தை பதிவு செய்து கொடுப்பது மட்டுமே. அண்ணாமலைக்கு இந்த நடைமுறைகள் தெரியவில்லையென்றால் ஒரு மேடையை போட்டு பேசுவோம். இது தொடர்பாக நான் அவருடன் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு ஹென்றி பேசினார்.

மேலும் பதிவுத்துறையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தட்கல் பதிவு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முத்திரைத்தாள் பதிவு கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதை அரசு கவனத்தில் கொண்டு அவற்றின் விலையை குறைக்க வேண்டும். சிமெண்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணைதலைவர் செந்தில்குமார், கேரள மாநில பொறுப்பாளர் பிரசன்ன மணிகண்டன், தலைமை அலுவலக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார், ஜெயம் கண்ணன், பிரபாகர், மெடிக்கல் நாராயணன், வினோத் சிங் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

About admin

Check Also

Amrita Vishwa Vidyapeetham Hosts Workshop on Cultural Ecology of Environment and Climate Change

Chennai, December, 2024: Amrita Vishwa Vidyapeetham recently organized a workshop on “Cultural Ecology of Environment and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat