கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. இந்த ‘மேதகு’ முதல் பாகமும் தற்போது, அதன் இரண்டாம் பாகமான ‘மேதகு-2’ கடந்த ஆகஸ்ட் – 28 ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.
இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.
1983- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
அதே போன்று 1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.
கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர் நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம், பாடகர்கள் சைந்தவி, புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட்-19 ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது வளர்ந்து வரும் ஒடிடி யான ‘மூவி வுட்’ மேதகு மற்றும் மேதகு 2 ஆகிய இரண்டு பாகங்களையும் கடந்த ஆகஸ்ட் – 28 ஆம் தேதி வெளியிட்டுள்ளார்கள்.