பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று (26.06.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு), திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்), திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), தலைமைப் பொறியாளர்கள் திரு.எஸ்.ராஜேந்திரன் (பொது), திரு.எஸ்.சக்திமணிகண்டன், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி/இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் வளைவு மழைநீர் வடிகால்கள் உள்ள இடங்களில் தூர்வாரும் நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் தற்போதைய நிலை, மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத்தாமரைகளை ரோபோடிக் எக்ஸ்கவேட்டர், ஆம்பிபியன் மற்றும் மினி ஆம்பிபியன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றிடும் நடவடிக்கைகள், பருவமழைக்கு முன்னதாக சுரங்கப்பாதைகளின் தொட்டிகளில் உள்ள வண்டல்களை தூர்வாரி, அங்குள்ள மோட்டார் பம்புகளின் தற்போதைய செயல்பாடுகள், வாகனப் போக்குவரத்து இல்லாத நேரங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எரியாத தெருவிளக்குகளைக் கண்காணித்து உடனடியாக மாற்றியமைத்தல், போக்குவரத்திற்கு இடையூறாக தொங்கும் கேபிள்களை உடனடியாக அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாண்புமிகு மேயர் அவர்கள் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்
மாண்புமிகு மேயர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :
கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 767 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 558.41 கி.மீ. நீளத்திலும், கோவளம் வடிநிலப் பகுதிகளில் 160.54 கி.மீ. நிளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் 116.54 கி.மீ. நீளத்திலும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் 43.05 கி.மீ. நிளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில் 39.26 கி.மீ. நீளத்திலும் என 714.21 கி.மீ. நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதர மழைநீர் வடிகால் பணிகளை உரிய இணைப்புகளை ஏற்படுத்தி விரைந்து முடித்திட வேண்டும்.
792 கி.மீ. நீளத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளில் 226 கி.மீ. நீளத்திலான மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாம்பலம் கால்வாயில் 3.06 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளில் 2.88 கி.மீ. நீளத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தூர்வாரும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு விரைந்து முடித்திட வேண்டும்.
ரூ.238.55 கோடி மதிப்பில் 275.40 கி.மீ. நீளத்தில் 1,398 சாலைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மக்களுக்கு இடையூறின்றி, பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்து உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு முடித்திட வேண்டும்.
தற்போது வரக்கூடிய நாட்களில் சென்னையில் அதிகமான மழைப்பொழிவு ஏற்படும் என்கிற நிலையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளையும், இணைப்பு இல்லாத இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடித்திட வேண்டும். பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதனை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை மேற்கொண்டு, அதனை சரிசெய்து அதற்குரிய அறிக்கையினை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், அனைத்துத் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.