சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.10,000/-பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெரம்பூர், பொன்னுசாமி நகர், எண்.11/14 என்ற முகவரியில் வசிக்கும் திரு.சகாயராஜ், வ/55, த/பெ.அந்தோணிராஜ், மற்றும் அயனாவரம், ஏகாங்கிபுரம், 4வது தெரு, எண்.33 என்ற முகவரியில் வசிக்கும் ஜனார்த்தனன், வ/52, த/பெ.பஞ்சாட்சரம் ஆகிய இருவரும், ஆட்டோ ஓட்டி வேலை செய்து வருகின்றனர். மேற்படி ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 20.06.2024 அன்று இரவு 7.00 மணியளவில் ஓட்டேரி, பெரம்பூர் நெடுஞ்சாலை, ஜமாலியா, எவர்வின் பள்ளி எதிர்புறம் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து பணம் சாலையில் விழுந்துள்ளது. இதனை கவனித்த மேற்படி ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து பார்த்த போது, மொத்தம் ரூ. 10,000/- இருந்துள்ளது. உடனே மேற்படி ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும் மேற்படி ரூ.10,000/- பணத்தை P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி பணத்தின் உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக, காவல் நிலைய காவல் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் சாலையில் கண்டெடுத்த பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்கள் திரு.சகாயராஜ் மற்றும் திரு.ஜனார்த்தனன் ஆகியோரை இன்று (24.06.2024) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
