தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
2013ம் ஆண்டு இடிமுரசு இளங்கோ என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி அறிவழகன், வ/30, த/பெ.மதிவழகன், 5வது தெரு, பி.வி.காலனி, வியாசர்பாடி, சென்னை என்பவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த எதிரி அறிவழகன் இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், விசாரணை நீதிமன்றத்தில் இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
மேற்படி நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எதிரி அறிவழகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தபோது, 09.12.2024 அன்று காலை பனந்தோப்பு இரயில்வே காலனி அருகே எதிரி அறிவழகன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் திரு.P.பிரேம்குமார், திரு.P.வெங்கடேஸ்வரன், தலைமைக் காவலர் P.சலீம் மற்றும் முதல்நிலைக் காவலர் P.ஆண்டனி பிரேம்குமார் ஆகியோர் பனந்தோப்பு இரயில்வே காலனி அருகே சென்றபோது, போலீசாரை பார்த்ததும் எதிரி அறிவழகன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை மிரட்டியபோது, தனிப்படை போலீசார் துப்பாக்கியால் அறிவழகனின் காலில் சுட்டு பிடித்தனர். சுட்டுப்பிடிக்கப்பட்ட அறிவழகன் சிகிச்சைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப., அவர்கள் தனிப்டை போலீசாரை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.