தேசியக் கட்சிகள் கோலோச்சும் மாவட்டங்களில் முதன்மையானது கன்னியாகுமரி. அதனால் தான் முன்பு ஒருமுறை திமுக தலைவராக இருந்த கருணாநிதி, நெல்லை எனக்கு எல்லை. குமரி எனக்குத் தொல்லை எனப் பேசியிருந்தார். அந்த அளவுக்கு குமரி மாவட்டத்தில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எனத் தேசிய கட்சிகள் கோலோச்சும்.
இங்கு காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே இந்த முறை கடும்போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சிட்டிங் எம்பி விஜய் வசந்திற்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் சூழல் உள்ளது. அதிமுக பசிலியான் நசரேத் என்பவரை வேட்பாளராக விடுவதற்குக் களப்பணி செய்துவருகிறது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை மரிய ஜெனிபர் என்னும் பெண் வேட்பாளரைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை இந்தத் தொகுதியில் சீட் பெற மூன்று முக்கியப் புள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சீட் பெற காய்நகர்த்தி வருகிறார். ஏற்கனவே இருமுறை இதேதொகுதியில் வென்றதனால் தலைமை வாய்ப்பு தரும் என அவர் நம்புகிறார்.
இதேபோல் புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனும் பாஜக தலைமையிடம் இதே தொகுதியைக் கேட்கிறார். அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் என்பதால் அவர் கன்னியாகுமரி தொகுதியைக் குறிவைக்கிறார்.
இதேபோல் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளும் கணிசமாக உள்ளது. இந்நிலையில் பாஜகவின் சீட் ரேஸில், பாஜக மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சதீஸ் ராஜா பெயரும் அடிபடுகின்றது. 12 ஆண்டுகளாக பாஜகவில் தீவிர கட்சிப் பணி செய்துவரும் சதீஸ் ராஜா, கொரோனா காலக்கட்டத்தில் ஏராளமான சேவைகளை இயலாதோருக்கும், இல்லாதவருக்கும் செய்திருந்தார். சதீஸ் ராஜா ஆர்.சி கிறிஸ்தவ நாடார். அவரது மனைவி இந்து நாடார். சதீஸ் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவரால் இருதரப்பு வாக்குகளையும் கவரமுடியும் என்பதால் சீட் ரேஸில் அவர் பெயரும் பரிசீலனையில் உள்ளது.
பொன்னார், தமிழிசை, சதீஸ் ராஜா மூவரில் யாருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்பது ஒருசில நாள்களில் தெரிந்துவிடும்.