“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி

2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார்.

படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியும் கூட திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ‘மெய்யழகன்’ படக்குழுவினர் இதன் வெற்றி விழாவை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கொண்டாடினார். இந்த நிகழ்வு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,

நடிகர் அர்விந்த்சாமி பேசும்போது,

“நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியாகும்போது நான் இங்கே இல்லை. புரமோசன்களை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. நேற்று தான் வந்தேன். இந்த படத்தின் ரிலீஸை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அழகாக செய்து கொடுத்தார். வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக் கொள்வேன். பத்திரிகையாளர்கள் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்திக்கின் நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்க செல்வதற்கு முன் இந்த கதாபாத்திரம் இப்படித்தான் என மனதில் நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால் அங்கே உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பை பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அவ்வளவு படம் எல்லாம் நடிப்பதும் இல்லை. எந்த போட்டியிலும் இல்லை.. உங்களுக்கே தெரியும். செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது,

“இந்த படத்தை புரிந்து கொண்டு இதனை பாராட்டி விதவிதமான வரிகளில் விமர்சனங்களை எழுதிய ஊடகங்களுக்கு மிகப்பெரிய நன்றி. இன்னொரு பக்கம் உலகத்தில் சின்ன சின்ன மூலைகளில் இருந்தும் கூட இந்த படம் ஒவ்வொருவரிடமும் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று எழுத்து பதிவுகளாகவும் மீம்ஸ் ஆகவும் ரீல்ஸ்களாகவும் வெளியிட்டு வரும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவ்வளவு அழகான கதைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு படம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அப்படி ஒரு கதை என்னிடம் வரும்போது அதை எப்படி மிஸ் பண்ணுவேன்.

மெட்ராஸ் படம் வெளியான சமயத்தில் பொழுதுபோக்கு படம் பண்ணினாலும் பருத்திவீரன், மெட்ராஸ் போன்ற படங்களையும் பண்ண வேண்டும் என நீங்கள் ( பத்திரிக்கையாளர்கள் ) சொல்லியிருந்தீர்கள். அதை நான் மறக்க மாட்டேன். இந்த படம் எவ்வளவு உரையாடல்களை உருவாக்கி இருக்கிறது. நல்ல கலை படைப்புக்கு முக்கியமான விஷயமே இந்த உரையாடலை ஏற்படுத்துவது தான். விவாதத்தை ஏற்படுத்துவது தான். அப்படி நிறைய விஷயங்களை இந்த படம் பேச வைத்திருக்கிறது. அதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. எல்லா கலையம்சத்தையும் சேர்த்த கலைப்படைப்பு என காட்டிக் கொள்வதற்கு எப்போதாவது சில நல்ல படங்கள் அமையும்.அப்படி ஒரு படமாக தான் இதை பார்க்கிறேன்.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்கள் அவர்கள் எல்லோருக்கும் இந்த படம் நிச்சயம் புரியும் என நம்பினேன். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மக்களுக்கு எண்ண ஓட்டம் ஒரு மாதிரியாக இருந்திருக்கும். அதற்கு பிறகு வந்தவர்களின் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரி இருக்கும். தொழிலுக்காக சொந்த ஊரை விட்டு வருவது, நம் கலாச்சாரங்களை விட்டுப் போய்விடுவது, நம் சரித்திரத்தை மறந்து விடுவது என நாம் மறந்த, அதே சமயம் நம் மனதில் இப்போதும் ஆழமாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் எடுத்து கண் முன் வைத்தது போல் இந்த கதை இருந்தது. இன்று சர்ச்சையான விஷயங்கள் தான் நன்றாக போகிறது என்று சொல்லப்பட்டாலும் முன்பின் தெரியாதவருக்கு ஒருவர் செய்யும் உதவி குறித்த வீடியோ வெளியாகி அதனுடைய வியூஸ் எண்ணிக்கை தான் இங்கே அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இந்த படம் பண்ணினோம்.

கோவிந்தராஜின் படத்தொகுப்பில் நிகழ்கால காட்சியையும் கடந்த கால காட்சியையும் எந்தவித நெருடலும் இன்றி அழகாக கோர்த்திருந்ததனர். கோவிந்த் வசந்தாவின் இசையில் ஒரு மாடு கூட தெய்வமாக தெரிந்தது. பழைய சைக்கிளுக்கு அவ்வளவு வேல்யூ இருக்கிறது என்பதை உணர முடிந்தது. நாம் யாருக்கோ தெரியாமல் செய்யும் ஒரு உதவி அவர்களது வாழ்க்கையையே மாற்றும்போது நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் உதவி செய்வதில் தவறு என்ன இருக்கிறது ? இன்று ஒவ்வொருவரின் மனசாட்சியாக அவர்களை கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்றால் அதுதான் இசையின் வேல்யூ. எந்த இடத்திலும் சினிமா என்று தெரியாதபடி இருந்தது மகியின் ஒளிப்பதிவு இருந்தது.

நமக்கு எதுவும் வராதவரை எதுவும் பிரச்சினை இல்லை என்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் பின்னால் இருக்கிற ஒரு விஷயம் நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பதை எடுத்து கண் முன்னால் பேசும்போது தான் அதன் சீரியஸ்னஸ் தெரிகிறது. அது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது எனக்கே ஒரு படிப்பினையாக இருந்தது. அண்ணன் சூர்யா அடிக்கடி என்னிடம் உன்னால் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முடியுமோ அப்படி இரு என்று சொல்வார். அப்படி பெருந்தன்மையாக இருந்தால் தான் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். கோபப்பட்டவர்களிடம் கூட அன்பு காட்ட முடியும்.

நாங்கள் சிறுவயதில் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும்போது உறவினர்கள் தங்களது தகுதிக்கு மீறி எங்களை கவனிப்பார்கள். உபசரிப்பார்கள். நாம் சாப்பிடுகிறோமா என கவனித்து பார்ப்பார்கள். சில நேரம் அதை கையில் தொட்டுப் பார்க்காமல் கூட திரும்பி வருவோம். இப்போது அதை நினைத்து பார்த்தால் நம் மீது அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டிய அவர்களை அங்கீகரிக்கிறோமா? அதை திருப்பிக் கொடுக்கிறோமா என திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். மீண்டும் ஊருக்கு சென்றால் அவர்கள் வீட்டில் உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டு வர வேண்டும் என்று தோன்றுகிறது. அது போன்ற உணர்வுகளை நாம் இழந்து விட்டோமா அல்லது மறந்து விட்டோமா என்கிற நிலையில் தான் இந்த படம் அதை திரும்பவும் ஏற்படுத்துகிறது. அப்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும் அளவிற்கு இந்த படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கேரளாவிலும் அதே அளவிற்கு என வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். தொலைதூரத்தில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்கு இதன் மதிப்பு அதிகம் தெரிகிறது. இயக்குனர் பிரேம் ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார். அதன் எழுத்து நடையை படித்து முடித்ததும் உரிமையுடன் யார்யா நீ என்று கேட்கிற அளவிற்கு மரியாதை போய் அவரிடம் உரிமை வந்துவிட்டது. அதை எப்போது எழுதி முடிப்பார் என நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அர்விந்த் சாமியும் நானும் போட்டி போட்டு நடித்ததாக பலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையில் என்ஜாய் பண்ணி நடித்தோம். அதனால் அர்விந்த்சாமி சாருக்கு நன்றி சொல்ல முடியாது. ( சிரிக்கிறார் ) அடிக்கடி அவரை போய் தொல்லை பண்ணிக் கொண்டுதான் இருப்பேன். பிரேம்குமார் எழுதிய கதையில் உள்ள வரிகள் ஏற்படுத்தாத உணர்வை அர்விந்த்சாமி தான் திரையில் கொண்டு வந்தார். அதனால் அவருக்குத்தான் அந்த பாராட்டு சேரும்” என்று கூறினார்.

இயக்குநர் பிரேம்குமார் பேசும்போது,

”இந்த படத்தின் வெற்றிக்கு என்னுடன் துணை நின்ற பட குழுவினர் அத்தனை பேருக்கும் நன்றி. நானும் ஒளிப்பதிவாளர் மகேந்திரனும் ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள். நடிகர் சிவகுமார் சார் பேசும்போது கூட ஏண்டா ஒண்ணா படிச்சீங்கன்னா கூட ஒரே மாதிரியா இருப்பீங்க என்று நகைச்சுவையாக கேட்பார். 96 படத்தை விட இந்த படத்தில் மகேந்திரனின் வேலைகள் எனக்கு சற்று புரியபடவில்லை. ஆனாலும் படம் வெளியானபோது அதற்கு குவியும் பாராட்டுகளை பார்த்தபோது தான் நான் 8 வருடம் டச் விட்டுப் போனதால் ஒளிப்பதிவில் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இவ்வளவு ஒழுங்கு, இவ்வளவு சுதந்திரம் என இதற்கு முன் நான் பார்த்ததில்லை. அதற்கு தயாரிப்பாளர் ராஜசேகர் சாருக்கு நன்றி. பொதுவாக நான் ஒருவருடன் அதிகம் சண்டை போட்டால் அவர்களை என் வாழ்க்கையில் இருந்து தூக்கி ஓரமாக வைத்து விடுவேன். அதற்கு பிறகு அவர்களிடம் பேச மாட்டேன். ஆனால் இப்பொழுது நான் அதிகம் சண்டை போட்டது ராஜசேகர் சாருடன் தான். அவரை என்னால் விட முடியவில்லை. மனசு விட மாட்டேன் என்கிறது. 2டி இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றால் இந்த படம் இந்த அளவிற்கு வந்திருக்குமா, இந்த படத்தை இயக்கி இருப்பேனா என்பது சந்தேகம்தான். அந்த விதத்தில் சூர்யா சார், ஜோதிகா மேம் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. மெய்யழகன் மெய்யழகனாகவே வந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தான். படத்தின் கண்களாக இருக்கும் கார்த்தி, அர்விந்த்சாமி இருவருக்கும் நன்றி” என்று கூறினார்.

2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன் பேசும்போது,

“சமூக அக்கறை கொண்ட படங்களை பண்ண வேண்டும் என்பதுதான் 2டியின் அடிப்படை நோக்கம். அது நிறைய படங்களில் நிறைவேறி இருக்கிறது. ஆனால் அந்த படங்களுக்கு எல்லாம் மகுடம் சூட்டியது போல் இந்த மெய்யழகன் அமைந்துவிட்டது. படம் பார்த்துவிட்டு பேசுபவர்கள் எல்லோருமே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி எனக் கூறும் போது அவர்களின் எண்ணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரேம் குமாருடன் பணியாற்றியது அற்புதமான விஷயம். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஆனால் இங்கே எதையும் ஓப்பனாக பேச முடியாது. அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடன் நிறைய விஷயத்தில் சண்டை போடுவேன். படம் தொடர்பான வேலைகளுக்கு எந்த ஊருக்கு சென்று வந்தாலும் கூட நாங்கள் கொடுத்த பணத்தை அப்படியே எங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவார். வேறு யாரிடமும் இதை நாங்கள் பார்க்கவில்லை. பிரேமிடம் எனக்கு பிடித்த விஷயம் அவரது நேர்மை.. எதையும் நேராக பேசிவிடும் குணம்.

நம் கூடவே பல மெய்யழகன்கள் இருப்பார்கள். நமக்காக எந்த நேரத்திலும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அவர்களை நாம் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம்.. ஆனால் அவர்களது மதிப்பை உணர வைத்து இருக்கிறது இந்த மெய்யழகன். இந்த படத்தில் முதலில் பி.சி ஸ்ரீராமை தான் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்ய நினைத்தோம். அவரும் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பல இடங்களில் கண்கலங்கினார். அடுத்ததாக படத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் என ரொம்பவே ஆர்வமாகி வேலைகளில் இறங்கினார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக இந்த படத்தில் அவரால் பணியாற்ற முடியவில்லை. அவரே இந்த படத்தைப் பார்த்தால் நிச்சயம் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவை பாராட்டுவார்” என்றார்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ பேசும்போது,

“பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த பாராட்டுக்களில் என்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. கார்த்தி, அர்விந்த்சாமி இருவருடனும் பணியாற்றிய நாட்கள் என்பதை விட அவர்களுடன் இருந்த நாட்கள் என்பது ரொம்பவே அழகானவை. அது எப்போதுமே என் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும். ஆடல், பாடல், சண்டைக் காட்சிகள் கொண்ட படங்கள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த மாதிரி படங்கள் வருவது அபூர்வம். இந்த படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி” என்று கூறினார்

ஆடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீ பேசும்போது,

“ஒரு நல்ல படம் அதற்கான ஆட்களை தானே தேடிக் கொள்ளும் என்பார்கள். அப்படித்தான் மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி எல்லோரும் வந்தது. அவர்களுக்கு இதுவரை நான் நன்றி கூட சொன்னது இல்லை. அர்விந்த்சாமிக்கு பல உடைகளை கொடுத்து அவரை சிரமப்படுத்தி உள்ளேன். மனசுக்குள் திட்டி இருப்பாரா என்று கூட தெரியாது. ஆனால் என்னிடம் எதையும் காட்டியதில்லை. கார்த்தியும் அதேபோலத்தான். இருவருமே உடைகளை தாண்டி தங்களது நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை இன்னும் மெருகேற்றினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,

“இந்த படத்தில் ஏறுகோல் காணிக்கை என்கிற பாடலில் அதற்கேற்ற பொருத்தமான வார்த்தை அமைவதில் சிரமம் ஏற்பட்டது. என் மனைவி தமிழ் படித்தவர் என்பதால் அவரிடம் கூறியபோது, ஏறுகோல் என்கிற வார்த்தை சரியாக இருக்கும் என்று கூறினார். அதன்பிறகு ஏறுகோல் படையல், ஏறுகோள் காணிக்கை என்று இரண்டு வார்த்தை எங்களுக்கு கிடைத்தது. இந்த நேரத்தில் தமிழ் மாணவியும் எனது மனைவியுமான கீதாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் நான் செல்லக்கூடிய உயரம் என்பது தான், நான் இயக்குனர் பிரேமுக்கு செலுத்தும் நன்றியாக இருக்கும். நிச்சயம் அந்த உயரத்திற்கு செல்வேன். அவர் கண் முன்னால் அந்த வளர்ச்சி நடக்கும்.

எங்கள் ஊரில் பார்த்த அத்தனை மனிதர்களிலும் கார்த்தி, அரவிந்த்சாமி என்கிற இரண்டு கதாபாத்திரங்கள் இருந்தார்கள். படம் பார்த்ததும் கண் கலங்கிவிட்டது. ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படவில்லை. ஏதோ ஒரு ஊருக்கு இரண்டு மணி நேரம் பயணம் சென்று வந்தது போல தான் தோன்றியது. நானும் பாடலாசிரியை உமா தேவியும் எவ்வளவு உயரங்கள் வளர்ந்தாலும் எங்களுக்குள் உள்ள நட்பு போகாது. போட்டி போட்டு தான் பாடல் எழுதுவோம். நான் சினிமாக்காக சென்னைக்கு ஓடி வந்த பிறகு என் தந்தையிடம் 10 வருடங்களாக பேசவில்லை .முதல் முதலாக தொட்டி ஜெயா படத்தில் என் பெயர் வந்ததும் அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு என் ஊரில் உள்ள அத்தனை பேரிடமும் அதை காட்டி ஆனந்த கண்ணீருடன் பெருமைப்பட்டார் என் அப்பா. பிறகுதான் என் தந்தையுடன் பேச ஆரம்பித்தேன். அதை ஏற்படுத்திக் கொடுத்ததும் இந்த பத்திரிகை தான். அதேபோல இந்த மெய்யழகன் படத்தையும் சரியாக நேரத்தில் சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறீர்கள்?” என்று கூறினார்.

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது,

“இந்த படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மிக உருக்கமான பாடல்கள். என் உணர்வுக்கும் வாழ்வுக்கும் நெருக்கமான பாடல்கள். இந்த இரண்டு பாடல்களையும் என்னுடைய உணர்ச்சிகளுடன் நான் வெளிப்படுத்தியுள்ளேன். கூடுதலாக என்னுடைய வலிகளுக்கு பெரும் மருந்தாக இயக்குனர் பிரேம், கமல் சாரை இதில் ஒருங்கிணைத்தது தான் மிகப்பெரிய ஆறுதல். 96 படத்திற்கு பிறகு அதே அன்புடன் இந்த மெய்யழகன் படத்தில் கோவிந்த் வசந்தா குழுவினருடன் மீண்டும் சேர்ந்திருக்கிறோம். எனக்கு போறேன் நான் போறேன் பாடல் முழு திருப்தியை தரவில்லை. அதன் ரெக்கார்டிங் சமயத்தில் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் ராஜா ஆகியோரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களைப் பார்த்தபோதுதான் நான் இந்த பாடலை முழுமையாக எழுதி இருக்கிறேன் என்கிற திருப்தி ஏற்பட்டது” என்று கூறினார்.

நடிகை தேவதர்ஷினி பேசும்போது,

“இந்த கதையின் ஆழத்தை புரிந்து கொண்டு இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி. நான் ஹாலிவுட் வெளியான டெர்மினல் படம் பார்த்துவிட்டு இப்படி கூட ஒரு மனிதன் இருக்க முடியுமா என டாம் ஹான்க்ஸ் நடிப்பை பார்த்து வியந்தேன் அந்த வகையில் நம் தமிழகத்திற்கு கிடைத்த டெர்மினல் தான் மெய்யழகன். தமிழகத்தின் டாம் ஹான்க்ஸ் நம்ம கார்த்தி தான். அர்விந்த்சாமி தன்னுடைய கதாபாத்திரமான அருள் இப்படித்தான் இருக்கும் இப்படித்தான் பேசும் என்கிற பிடிவாதத்துடன் இருந்ததை நான் அவரிடம் தொடர்ந்து கவனித்தேன். கேரக்டரை முழுதாக உள்வாங்க கூடிய நடிகர்களுக்கு தான் அந்த பிடிவாதம் இருக்கும். இங்கே நம்மில் பல பேர் அருளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

சுபஸ்ரீ என்ன ஆடை அணிகிறாரோ அதே உடையைத்தான் எனக்கு பிரேம் சார் கொடுப்பார். இயக்குனர் பிரேம்குமாரை இசை வெளியீட்டு விழாவில் ஒரு சாடிஸ்ட் என்றும் பெண்களை அழகை வைப்பவர் என்றும் கூறினேன். அதற்காக ஸாரி கேட்கிறேன். அவர் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் சேர்த்து அழ வைப்பவர். இந்த மெய்யழகன் மூலமாக எல்லோரையும் அழ வைத்து விட்டார். ஆண்களிடம் பெண்மை இருக்கிறது. பெண்களிடம் ஆண்மை இருக்கிறது. இது இயற்கையான ஒன்று. பெண்களிடம் இருக்கும் ஆண்மை கடந்த சில வருடங்களாகவே நன்றாக வெளிப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்களிடம் இருக்கும் பெண்மை தான் வெளிவர மறுக்கிறது. இந்த மெய்யழகன் படம் மூலம் ஆண்களிடம் இருக்கும் பெண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார்” என்று கூறினார்

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,

“’மெய்யழகன் படம் நிறைய மிக மெய்யழகன்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. நீங்கள் ஒரு வாழ்க்கையில் ஒரு அங்கமாக வாழ்க்கையை பார்த்தால் மட்டும்தான் இந்த மெய்யழகனை புரிந்து கொள்ள முடியும். மெய்யழகன் படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சிறப்பு காட்சி ஒன்றை திரையிட்டோம். அதில் படம் பார்த்தவர்களின் கருத்து, மனநிலை எப்படி இருக்கிறது என்று என்னிடம் சூர்யா அண்ணா கேட்டார். அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரித்து வரும் ஒரு தயாரிப்பாளரும் இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தார். அவர் என்னிடம் கூறும்போது நான் மூன்று படங்களை தயாரித்து வருகிறேன். அந்த அழுத்தம் காரணமாக என்னால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் இன்று மெய்யழகன் பார்த்ததும் இன்று இரவில் சென்று நிம்மதியாக தூங்குவேன். ஏனென்றால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது. மெய்யழகனை போல அட்லீஸ்ட் 20% ஆவது ஆக வேண்டுமென்றால் என்னவெல்லாம் சரி பண்ணிக்கொள்ள வேண்டும் என அந்த மெய்யழகன் கதாபாத்திரத்தை படம் பார்க்கும்போதே இன்ச் பை இன்ச் ஆக பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். என்னை திருத்திக் கொள்வதற்கும் அப்டேட் பண்ணுவதற்கும் முயற்சிப்பேன் என்று கூறினார்.

அவர் கூறியதை தான் நான் சூர்யா அண்ணனிடம் சொன்னேன். 2டியில் இது ரொம்ப ரொம்ப முக்கியமான படம். ஏற்கனவே உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் என்ன மரியாதை இருக்கிறதோ அதற்கு மகுடம் சூட்டியது போல தான் இந்த படம் இருக்கும் என்று சொன்னபோது இடைமறித்து அது என்னய்யா உங்க கம்பெனி நம்ம கம்பெனி என்று சொல் என்று கூறியதை கேட்டு நான் ஆடிப் போனேன். கடைக்கோடியில் இருந்து சினிமாவுக்கு வந்த என்னை மிக உச்சத்தில் இருக்கும் அவர் இப்படி கூறியதை பார்க்கும்போது என் எதிரில் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மெய்யழகனாகத்தான் சூர்யா அண்ணனைப் பார்க்கிறேன். தயாரிப்பாளர் ராஜா அண்ணனிடம் வந்து இதுபற்றி கூறியபோது அப்படியா, நீ நம்ம கம்பெனி என்று தானே கூறியிருக்க வேண்டும் என அவரும் கூறினார். அந்த வகையில் அவர்தான் இரண்டாவது மெய்யழகன். பிரேம்குமார் அன்பை மட்டுமே நம்பி இந்த படத்தை பண்ணியிருக்கிறார். அப்படி ஒரு இயக்குனர் வரும்போது அவரை தலைமையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியது நம் திரைத்துறையில் இருக்கும் அனைவரின் கடமை. அதை அனைத்து பத்திரிகையாளர்களும் செய்திருந்தார்கள்” என்றார்.

மேலும் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த்சாமி, தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் பிரேம்குமார் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் மாவீரன் சிலை ஒன்றையும் பரிசளித்தார் சக்திவேலன்.

  • Johnson Pro

TWITTER

@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash @ActorSarann #GovindVasantha #MahendiranJayaraju #Rajeevan @R_Govindaraj @subhaskaar @gopiprasannaa @johnsoncinepro @gobeatroute

INSTAGRAM

@karthi_offl @thearvindswami #PremKumar @actorsuriya @jyotika @2d_entertainment @rajsekarpandian #Rajkiran @sd_sridivya #Jayaprakash @_saranofficial #GovindVasantha @jayarajumahendiran #Govindaraj #Rajeevan @subhaskaar @gopiprasannaa @johnsoncinepro @gobeatroute

FACEBOOK

@sikarthi #ArvindSwami #PremKumar @ActorSuriya @Official.2D @rajsekarkarpoorasundarapandian #RajkirenActor #Sridivya #Jayaprakash #ActorSarann #GovindVasantha @mahendiranj #Rajeevan #Govindaraj #GopiPrasannaa #JohnsonCinePRO #ThinkMusic #BeatRoute

About admin

Check Also

Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 Lakh.

‘Uzhavar Virudhugal 2025’ (Farmers Awards 2025) – An initiative by Uzhavan Foundation to honour and …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat