சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும், இன்று (22.01.2025) காவல் ஆணையாளர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகளாக காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் சென்னை பெருநகரில் அனைத்து காவல் மாவட்டங்களிலும் உரிய வாகன தணிக்கை, விடுதிகளில் தங்குபவர்கள், சந்தேக நபர்கள் தணிக்கை, ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், சந்தேக வாகனங்கள், உயர் பாதுகாப்பிற்குரிய இடங்கள், கட்டிடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்து பணி செய்து பாதுகாப்பை பலப்படுத்திட அறிவுறுத்தினார்.
மேலும் முக்கிய பிரமுகர் வழித்தட பாதுகாப்பு, விழா நடைபெறும் இடம், முக்கிய விருந்தினர்கள் அமரும் பகுதி, பார்வையாளர்கள் அமரும் பகுதி, அலங்கார ஊர்திகள் செல்லயிருக்கும் பகுதிகளில் பாதுகாப்பை தொடர்ச்சியாக கண்காணித்திடவும், உரிய போக்குவரத்து திட்டத்துடன் வாகன போக்குவரத்துகளை சீர்படுத்திடவும், வாகன நிறுத்துமிடங்களில் உரிய வசதிகளை ஏற்படுத்திடவும், மேற்கண்ட அனைத்தையும் உயரதிகாரிகள் தணிக்கை செய்திடவும் அறிவுறுத்தினார்.
மேலும் பாதுகாப்பு சென்னை காவல் பிரிவு போலீசார் மூலம் Anti Sabotage Check வெடிபொருள் கண்டறிதல், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உயர்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து காவல் துறை பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திடவும், முன்னேற்பாடுகளில் தொய்வு இல்லாமல் தொடர்ச்சியான பாதுகாப்பு பணிகளை தொடரவும் காவல் ஆணையாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
Check Also
பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று …