ஆகஸ்டு 19ல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு 

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாக பணிபுரிந்துள்ளார்கள். 

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. 

குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலை மறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

1983- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். 

அதே போன்று 1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்த சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம். 

கதாநாயகனாக தமிழீழ தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்கள குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார். 

இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டை பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப்படத்திற்காக வழங்கியுள்ளனர். 

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.

ஏற்கனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து அனைத்து மக்களுக்கும் இந்த படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் துவங்கியுள்ளனர்.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.

இதற்கு முன்னதாக பழ. நெடுமாறன், பெ. மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு,  நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About admin

Check Also

Karky Tamil Academy and Silverzone Organization Announce “Tamil Olympiad” Launched at Future of Education 2024 Conference

Chennai, October 2024 The Future of Education 2024 conference took place today at the IIT …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat