Wednesday , November 20 2019

*இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்*

தீர்மானம் : 1

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து,

மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள்!

தமிழக மக்கள் மீது தாங்கமுடியாத பெரும் சுமையை ஏற்றிவைப்பது போல், ஒரேநேரத்தில் 3600 கோடி ரூபாய் அளவிற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களின் கட்டணத்தை திடீரென்று நள்ளிரவில் உயர்த்தி 20.1.2018 முதல் அமல்படுத்தியதைக் கடுமையாக எதிர்த்து அனைத்துத் தரப்பு மக்களும் போராடினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் 27.1.2018 அன்று கண்டன ஆர்பாட்டமும், பிறகு 29.1.2018 அன்று சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தி, ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதானார்கள். அடைத்து வைக்க சிறையில் இடமில்லாத காரணத்தால், கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள். எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு அதிமுக அரசு கட்டணக் குறைப்பு என்று ஒரு ““கண் துடைப்பு”க் கபடநாடகத்தை நடத்தியதே தவிர, உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணங்களை முழுமையாகத் திரும்பப் பெற முன்வரவில்லை. அதனால் மாணவ மாணவியர், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரம் செய்யும் தாய்மார்கள், மருத்துவமனைகளுக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, புதிதாக மாதாந்திர பேருந்து பாஸ் கட்டணத்தை ரூ.1000-லிருந்து ரூ.1,300-ஆகவும்; ஒரு நாள் பயணக் கட்டணத்தை ரூ.50/-லிருந்து ரூ.80/-ஆகவும் உயர்த்தி பொதுமக்களை தொடர்ந்து பாதிப்புக்கு அ.தி.மு.க. அரசு ஆளாக்கி வருகிறது.

பேருந்து கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதால், பயணிகள் எண்ணிக்கை பல இலட்சங்கள் குறைந்து, கட்டண உயர்வு விகிதத்திற்கேற்ப, போக்குவரத்துக் கழக வருவாய் உயர்ந்திடவில்லை என்பதை அ.தி.மு.க. அரசு கருத்தில் கொண்டு, கட்டண உயர்வினை திரும்ப பெறுதல் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய பிறகும் – எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர்ப்பு வலுத்தும்கூட, மக்கள் நலன் பற்றியோ நாள்தோறும் பெருகிவரும் அதிருப்தி அலையைப் பற்றியோ சிறிதேனும் எண்ணிப் பார்த்திடும் அளவுக்கு இதயத்தில் ஈரமில்லாமல் அதிமுக அரசு ஏனோதானோ என்றமுறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த அதிர்ச்சியுடன் பதிவு செய்கிறது.

எனவே, உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணத்தை திரும்பப் பெற அடாவடியாக மறுத்து வரும் அதிமுக அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 13-2-2018 (செவ்வாய்) அன்று “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களை”நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் : 2

போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்க!

மக்களுக்கு எதிரான போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தன்னெழுச்சியாக மாணவர்களும், தாய்மார்களும் ஆவேசமாகப் போராடினார்கள். ஜனநாயக உணர்வுகளையும், அமைதியான அறவழிப் போராட்டங்களையும் மதித்து நடப்பதற்குப் பதில் காவல்துறை மூலம் ஆங்காங்கு போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தடியடி செய்து காட்டுதர்பார் நடத்தியது தமிழக அரசு. முதலமைச்சர் இல்லத்தின் முன்பே போராடிய மாணவர்கள் அராஜகமாகக் கைது செய்யப்பட்டு, ஈவு இரக்கமின்றி மாணவச் செல்வங்கள் என்று கூடப் பாராமல் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று பொதுமக்கள் நலன்கருதி போராடிய மாணவர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை அதிமுக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும், கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அதிமுக அரசை வலியுறுத்துவதுடன்; மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

உயர்நீதிமன்றம் உருவாக்கிட எண்ணிய சகஜ நிலைமைக்கு திட்டமிட்டு

குந்தகம் விளைவிக்கும் பிற்போக்கு நடவடிக்கையைக் கைவிடுக!

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முறையான முன்னறிவிப்பு செய்து, 4.1.2018 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராடும் போக்குவரத்து ஊழியர்கள் பொதுமக்கள் நலன் கருதி பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு மணிக்குமார் மற்றும் மாண்புமிகு கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய அறிவுரையின் பேரில் 11.1.2018 அன்று முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர். பொங்கல் விழா காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் போக்குவரத்துக் கழக நடத்துனர்களும், ஓட்டுனர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணி நேரத்தையும் தாண்டிக் கூட பணி புரிந்து பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பற்றி விசாரித்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்குமாறு சென்னை நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் நு.பத்மனாபன் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமித்து அளித்த 11.1.2018-ஆம் தேதி தீர்ப்பின் 30-ஆவது பத்தியில் ““ போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவதன் மூலம் சகஜ நிலைமை திரும்பும்”

என்று தெரிவித்துள்ளார்கள். அரசுக்கும் – போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் சகஜ நிலைமை திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றமே விரும்பி இந்த வேலை நிறுத்தத்தை முடித்து வைத்துள்ள நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தைப் பிடித்தும் ஓய்வுபெற்றோரின் ஓய்வூதியப் பலன்களைக் கொடுக்காமலும் பழிவாங்கும் வகையில் தொழிலாளர் அமைதிக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் அதிமுக அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

எனவே, சட்டபூர்வமாக நடைபெற்ற வேலை நிறுத்த நாட்களுக்காகப் பிடிக்கப்பட்டுள்ள சம்பளத்தையும் ஓய்வூதியப் பலன்களையும் உடனடியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும்; சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்த எண்ணியிருக்கும் சகஜ நிலைமைக்கு மேலும் குந்தகம் விளைவிக்காமல் பொறுமையும் கண்ணியமும் காத்திடுமாறு அ.தி.மு.க அரசை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

About Admin

Check Also

VR Chennai in association with Blue Cross of India organised ‘Adoptathon

VR Chennai in association with Blue Cross of India organised Adoptathon November 2019 on Sunday …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.