Monday , March 30 2020
Home / Health / நெஞ்செரிச்சல் கோளாறுக்கு தீர்வு

நெஞ்செரிச்சல் கோளாறுக்கு தீர்வு

வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால், அதுவே ஒரு நோயாகக்கூட மாறலாம். அதனால் ஏற்படும் சில பிரச்னை, அதற்கான காரணம், விளைவுகள் மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் இதோ…. @

நாம் உண்ணும் உணவு, உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதியை சென்றடையும். உணவுக்குழாயின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் (இரைப்பைக்கு மேல்) திறந்து, மூடும் வடிவிலான தசைகள் இருக்கும். மேலே உள்ள தசை, நாம் சாப்பிடும்போது உணவு மூச்சுக்குழாய்க்குள் போய்விடாமல் இருக்க உதவக்கூடியது.

அதேபோல், கீழே உள்ள தசை, இரைப்பைக்கு சென்ற உணவு அதன் அமிலத்தன்மை காரணமாக மேல்நோக்கி சென்று விடாமல் இருக்க உதவும்.

ஆனால், செரிமானத்தின்போது வெளியாகும் அமிலமானது, உணவுக்குறைபாடு காரணமாகவோ, இரைப்பை அழற்சி காரணமாகவோ இரைப்பையின் அருகில் இருக்கும் மூடிகளின் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மேல்நோக்கி உணவுக்குழாயில் பயணிக்க தொடங்கும். இந்த நிகழ்வின்போது உணவுக்குழாயின் இருபக்கங்களிலும் அமிலம் தேங்கிவிடும்.

இதன் காரணமாகத்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. உடல் பருமன், புகைபிடித்தல். மது அருந்துதல், நேரத்துக்கு சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல், மருத்துaவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்து போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். சிலருக்கு, இரவு தூக்கத்தின்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவு உண்டவுடன் செரிமானத்துக்கு நேரம் தராமல் உறங்குவதால், வயிற்றில் உருவாகும் அமிலம், உணவுக்குழாயை நோக்கி நகர்ந்து பிரச்னையை ஏற்படுத்தும்.

செரிமான கோளாறுகளுக்கு, நெஞ்செரிச்சல் மிக முக்கியமான அறிகுறி. இதில், மூன்று வகை உள்ளது. முதல் இரண்டு வகைகளையும் மருந்து மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சரி செய்துவிடலாம்.

மூன்றாவது வகை, ஆபத்தானது. இரைப்பைக்கு மேலிருக்கும் சுருங்கு தசைகள் முற்றிலுமாக அழிந்துவிடுவதையே இது குறிக்கும். நெஞ்செரிச்சலை தொடர்ந்து உதாசீனப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்கு, லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை செய்யவேண்டியது அவசியம்.

போதிய அக்கறை எடுத்துக்கொள்ளாமல் விடப்படும் நெஞ்செரிச்சல், அதன் தொடர்ச்சியாக பித்தப்பை கட்டி, அல்சர், குடலிறக்கம், இரைப்பை வாதம், சுருக்க தசைகள் அழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த பாதிப்பு வந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை எண்டோஸ்கோப்பி செய்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

கவனிக்காமல் விடும் பட்சத்தில், இது புற்றுநோயாக மாறும் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, முதுமை போன்றவற்றால் இதய பாதிப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சுவலியை சிலர் நெஞ்செரிச்சல் என்று தவறாக எண்ணிக்கொள்வதுண்டு. இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள், அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 10 நாட்ளுக்கும் மேலாக நெஞ்செரிச்சல் தொந்தரவு இருக்குமேயானால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

உணவு உண்ணும்போது, உணவை விழுங்குவதற்கு சிரமப்படுவது, குரல்வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நீடிப்பது, இரவு தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டு இருமுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

குண்டாக இருப்பவர்கள், அதிகம் சாப்பிடுபவர்கள், இறுக்கமான ஆடை அணிபவர்கள் மற்றும் புகை சூழ்ந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு முறைக்கும் மேல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குறிப்பாக, இரவு நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மரபுரீதியாக ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். ஆகவே, குடும்பத்தில் யாருக்கேனும் உணவுக்குழாய் சிக்கல்களோ, உணவுக்குழாயில் புற்றுநோயோ இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சாப்பிட்டவுடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும். இரவுநேரத்தில், உணவுக்கும், உறக்கத்துக்கும் மூன்று மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். அதிகமாக சாப்பிடக்கூடாது.

நொறுக்குத்தீனிகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். பாதி வயிறு உணவும், மீதி தண்ணீருமாக இருக்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைவிட்டு முழுமையாக வெளியே வரவேண்டும். குறிப்பாக, இரவில் குறைவாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாக்லேட் அதிகம் சாப்பிடாமல் இருப்பது, டீ-காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை (சிட்ரஸ், கால்சியம்) உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. வேறு சில மருத்துவ சிகிச்சைகள் எடுப்பவர்கள், இந்த நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி, அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.அமிலத்தன்மையை குறைக்கும் உணவை உட்கொள்ள வேண்டும்.

நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டவுடன் சிலர் ஜெலுசில், ரானிடிடின் போன்ற மாத்திரைகளை உட்கொள்வார்கள். இது தவறில்லை என்றாலும், பத்து நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஜெலுசில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான அளவு தூக்கம் அவசியம். இவற்றை முறையாக கடைபிடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் அதுசார்ந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

About Admin

Check Also

Genetic or environmental factors can cause a hole in your child’s heart at birth

We constantly stress on taking care of our hearts as it is the most crucial …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *