Thursday , March 21 2019
Home / Cinema / “சின்ன படங்களை கொல்லாதீங்க” ; ‘நான் இப்படித்தான்’ விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

“சின்ன படங்களை கொல்லாதீங்க” ; ‘நான் இப்படித்தான்’ விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார். 
 
இந்தப்படத்திற்கு ஏ.கே.ராம்ஜி இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யானை மேல் குதிரை சவாரி, பெப்பே, ஒளிச்சித்திரம், நரிவேட்டை படங்களில் பணியாற்றிய கணேஷ்குமார் படத்தொகுப்பாளராக தனது பங்களிப்பை தந்துள்ளார்.
 
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்தவிழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ‘முருகா’ அசோக், கேபிள் சங்கர், தரரிப்பாளர் திருநாவுக்கரசு, இயக்குனர் தங்கசாமி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியபோது சிறிய பட தயாரிப்பளர்களின் ஒட்டுமொத்த ஆதங்கத்தை தனது பேச்சில் வெளிப்படுத்தினார்., 
 
“இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரில் இருந்து வந்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரையும் வாழ்விக்கும். ஆனால் தற்போது இங்குள்ள சூழலில் அப்படி வருபவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் என்ன பாதுகாப்பு கொடுக்கிறது.? 
 
இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஒரு கோடி ரூபாயை இன்வெஸ்ட் பண்ணவேண்டும். அதிலிருந்து வாக்களர்களுக்கு காசு கொடுத்து சங்கத்தில் தலைவர், பொருளாளர் என ஏதோ ஒரு பொறுப்பிற்கும் வந்துவிட வேண்டும். அதற்கப்புறம் நீங்கள் தைரியமாக படம் எடுக்கலாம். இதுதான் இன்றைய நிலை.
 
சமீபத்தில் விஷால், கதிரேசன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தலைமையில்  தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஆனால் எங்களைப்போன்ற சில தயாரிப்பாளர்களை 12 மணிக்குத்தான் உள்ளே அனுமதித்தார்கள். நாங்கள் கேள்வி எதுவும் கேட்டுவிடுவோமோ என பயந்து ஒரு மணிக்கே தேசிய கீதம் பாடி கூட்டத்தை முடித்துவிட்டார்கள். இந்தகூட்டத்தில் கடந்த அரையாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை. போன வருடம் தாணு சார் பொறுப்பில் இருந்தபோது உண்டான கணக்குகளை காட்டிவிட்டு கிளம்பிவிட்டனர். அதைத்தான் அவர் காட்டிவிட்டாரே..? அப்புறம் நீங்கள் எதற்கு..? இந்த நிர்வாகம் சங்க வைப்பு நிதியில் இருந்து பணத்தை முறைகேடாக கையாடல் செய்து விட்டீர்கள் என பகிரங்கமாகவே நான் குற்றம் சாட்டுகிறேன். அப்படி இல்லையென்றால் என் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டியதுதானே..? கேள்வி கேட்டால் சங்கத்தை விட்டு நீக்குவேன் என நோட்டீஸ் கொடுக்கிறார்கள்.
 
இப்போது விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலிலும் நிற்கிறார்கள். கேட்டால் கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்கபோகிறோம் என்கிறார்கள். சின்ன படங்களுக்கு எங்கே கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது..? இவர்கள் ஒரு பத்து பேர் தங்களது படங்களை காப்பாற்றிக்கொள்ள தேர்தலில் நிற்கிறார்கள். இதனால் சிறிய தயாரிப்பாளர்களுக்கு எந்த பயனும் இல்லை.
 
கதை திருட்டு பிரச்சனை இன்னொரு பக்கம் வெடித்திருக்கிறது. இன்று கதாசிரியர் என்கிற இனமே தமிழ்சினிமாவில் இல்லாமல் போய்விட்டது. எதற்காக கதையை திருடி எடுக்கிறீர்கள்..? பணத்தை கொடுத்து நல்ல கதையை வாங்கி படம் எடுக்கலாமே..? ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தை அப்படியே உல்டா செய்து அரண்மனை படம் எடுத்தார்கள்.. நாங்கள் நீதிமன்றம் மூலமாக சென்று அந்தப்பட தயாரிப்பாளருக்கு பத்து லட்சம் ரூபாய் வாங்கி தந்தோம்.
 
ஆனால் இப்போது சங்கத்தின் செயலாளராக உள்ள கதிரேசன் ரஜினியின் மூன்றுமுகம் பட ரைட்ஸை வாங்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தின் கதை, மூன்று முகம் படத்தின் கதைதான் என்று கூறி, அதனால் தனக்கு நஷ்ட ஈடாக மூன்றரை கோடி ரூபாய் வேண்டும் என கேட்டு நோட்டீஸ் அனுபியுள்ளார். பழைய பட தயாரிப்பாளருக்கு பத்து லட்சம். ஆனால் இவருக்கு மட்டும் மூன்றரை கோடி வேண்டுமாம்..? 
 
அப்படி பார்த்தால் ‘மெர்சல்’ படம் மூன்று முகம் மட்டுமல்ல, குடியிருந்த கோவில், அபூர்வ சகோதரர்கள் மாதிரி நான்கைந்து படங்களோட தழுவித்தான் எடுக்கப்பட்டுள்ளது. அட்லீ அப்படியெல்லாம் ஒரு படத்தை மட்டுமே காப்பியடித்து படம் எடுக்கிறவர் அல்ல. மொத்தமா பத்து படங்களை காப்பயியடிச்சுத்தான் படம் பண்ணுவார். அப்படினா குடியிருந்த கோவில், அபூர்வ சகோதரர்கள் தயாரிப்பாளர்களுக்கு யார் நஷ்ட ஈடு வாங்கி தருவாங்க..? நீங்க சங்கத்துல பொறுப்புக்கு வர்றதுக்காக செலவு பண்ணின காசை எடுக்க இந்த சங்கத்தை தவறா பயன்படுத்துறீங்க.. சித்தார்த்தை, கார்த்திக் சுப்புராஜை, அட்லீயை எல்லோரையும் மிரட்டுறீங்க.. ரெட் கார்டு போடுவோம்னு சொல்றீங்க.. இதுக்குத்தான் நீங்க பொறுப்புக்கு வந்தீங்களா..?
 
அமேசன் பிரைம் என ஆன்லைனில் நம் படத்தை விற்பதற்கு வசதி இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு அது தெரியும். சங்கத்தில் இருக்கிற சிலர் மட்டும் அதை பயன்படுத்தி லாபம் அடைவார்களே தவிர, சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு அந்த வழியை காட்ட மாட்டார்கள்.
 
கேபிள் டிவில ஆடியோ விழாக்களின் வீடியோக்களை கொடுத்து காசு வாங்கி தர்றோம்னு சொல்றீங்க.. அப்படி ஏதோ ஒரு கேபிள் டிவில கொடுத்தா மத்த முக்கியமான சேனல்கள் மூலமா எப்படி அந்தப்படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்..? சின்னப்படங்களை கொல்வதற்கான முயற்சி தான் இது. சரி, அப்படி வரும் காசையும் எங்களுக்கா கொடுக்கப்போறீங்க..? நீங்க வாங்கி வச்சு செலவு பண்ணிட்டு போய்டுவீங்க.
 
பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, பைரசியை ஒழிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு அவர் கத்துக்கிட்ட வித்தையெல்லாம் காட்டுறேன்னு கோடிக்கணக்கில சங்க காசுல செலவு பண்ணிட்டு கடைசில மத்திய அரசு நினைச்சாத்தான் பைரசியை ஒழிக்க முடியும்னு சொல்றார்..? இதைத்தான் நாங்க ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு வர்றோமே.. இதுக்கு எதுக்காக அவ்வளவு பணம் செலவு பண்ணனும்.?
 
அவர்கள் இப்படி ஒவ்வொரு மேடையிலும் புதிதாக ஏதாவது திட்டம் பற்றி சொல்லும்போது, மீடியாக்கள் தான் கொஞ்சம் கவனம் எடுத்து அவர்கள் இதற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள என கேள்வி எழுப்ப வேண்டும். நடிகர் சங்கத்துல இவங்க குற்றச்சாட்டு அடுக்கினப்போ, சரத்குமார் மீடியாகிட்ட பேசாதீங்க, எங்கிட்ட நேரா வந்து பேசுங்கன்னு சொன்னார். அப்ப நாங்க மீடியாகிட்ட தான் பேசுவோம்னு சொன்ன இவங்க, இப்ப மீடியா கேள்வி கேட்கிறப்ப, நாங்க அதை நேரடியா பேசிக்குவோம்னு சொல்றாங்க..
 
இந்த குறிப்பிட்ட பத்து பேர் மட்டுமே இந்த சினிமா துறை அல்ல. மீதி 9௦ சதவீதம் சின்னப்படங்கள் தான். நாங்க நல்லா இயங்கினோம் என்றால் தான் இந்த பத்து பேருக்கும் பாதுகாப்பு. இவங்க பத்து பேருக்காக மீதி இருக்கிறவங்களை அழிக்க நினைச்சா ஒட்டுமொத்த சினிமாவே அழிஞ்சிரும். எங்களை நோட்டீஸ் கொடுத்து மிரட்டி ஒடுக்கிறலாம்னு நினைச்சுடாதீங்க.. இதைவிட பத்து மடங்கு இன்னும் வீரியமா கிளம்பி வருவோம் இந்த துறைக்கு படம் எடுக்கத்தான் வந்திருக்கிறோமே தவிர உங்களைப்போல பஞ்சாயத்து பண்ணி பணம் சம்பாதிக்க அல்ல. நீங்க மட்டுமே சம்பாதிக்கிறதுக்கு, உங்க படங்களோட பிரச்சனைக்கு கட்டப்பஞ்சாயத்து பண்றதுக்குன்னு மட்டுமே சங்கத்தை பயன்படுத்தாதீங்க” என மிகவும் காட்டமாக சங்கத்தின் நடவடிக்கைளை விமர்சித்தார் சுரேஷ் காமட்சி.

About Admin

Check Also

Actor Prabhas’s latest flick titled “Shades of Saaho Chapter 2”

Yet another glimpse of Actor Prabhas’s latest flick titled “Shades of Saaho Chapter 2” to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.